ஒரு துரோகத்தின் முன்னால் .....
--------------------------------------------
சற்றும் எதிர்பாரத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
தூரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம் ...
ஒரு வேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்து கொண்டிருக்கலாம் ...
அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்று விடலாமென்று
நினைத்து விடாதிர்கள் ....
அது அன்பை ..காத்திருப்பை ..
தியாகத்தை ..துயரத்தை
ஒரு போதும்
ஏறிட்டுப் பார்க்காது .....
மூக்கு நுனியில் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெரும் கோபம்
நியாயமான தென்றாலும்
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்...
உங்களை குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும் அது ..
சற்றும் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள் ..அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி வாசல் வரை
சென்று வழியனுப்பிப் பாருங்கள்
தலை குனிந்தவாறு
விடை பெறாமலேயே
சென்று விடக்கூடும் .......
அதிக கடினம்
என்றாலும் பெருங்கருணை கொண்டு
மன்னித்து விடுங்கள்
அடுத்த நிமிடமே அது இறந்துவிடும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக